மேற்குவங்க மாநிலம் சிலிகுரிக்கு அருகே இந்தியா புதிய ராணுவ தளங்களை அமைக்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை, வங்கதேசம் மற்றும் சீனாவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிலிகுரி பகுதி, வடகிழக்கு மாநிலங்களை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் 22 கிலோமீட்டர் நீளமுள்ள ஒரு முக்கியமான வழித்தடமாகும்.
சமீப மாதங்களுக்கு முன்பு, வங்கதேசம் இரண்டாம் உலகப் போரின்போது கைவிடப்பட்ட ஒரு விமான தளத்தைச் சிலிகுரிக்கு அருகே சீரமைத்தது. வங்கதேசத்தின் இந்த நடவடிக்கை பிராந்தியத்திற்கு அச்சுறுத்தலாகக் கருதப்பட்ட நிலையில், இந்திய ராணுவம் சிலிகுரியைச் சுற்றி மூன்று புதிய தளங்களை அமைக்கும் பணியில் இறங்கியுள்ளது.
இந்த புதிய ராணுவ தளங்கள் மேற்குவங்கத்தின் சோப்ரா, பீகாரின் கிஷன்கஞ்ச், மற்றும் அசாமின் துப்ரி ஆகிய இடங்களில் அமையவுள்ளன. இந்த தளங்கள் போருக்கான உத்திகளை வகுக்கும் கட்டுப்பாட்டு மையங்களாகச் செயல்படும் என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வங்கதேசத்தின் இடைக்கால அரசு, சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளிடமிருந்து போர் விமானங்கள் மற்றும் ட்ரோன்களை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், நாட்டின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த ராணுவ தளங்கள் அமைக்கப்படுகின்றன.
இந்த புதிய தளங்களின் உருவாக்கம், இந்தியாவின் பாதுகாப்பு உள்கட்டமைப்பு மற்றும் தொடர்புடைய தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கியமான படியாகும். இது பிராந்தியத்தில் இந்தியாவின் பாதுகாப்பு நிலைப்பாட்டை வலுப்படுத்துவதோடு, நவீன ராணுவ தொழில்நுட்பங்களின் பயன்பாட்டையும் உள்ளடக்கியது.