நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் ஆர்வமுள்ளவர்களுக்காக, அண்ணா பல்கலைக்கழகம் ஒரு புதிய 15 நாட்கள் ஆன்லைன் படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி மூலம் வழங்கப்படும் இந்த பாடநெறி, நானோ அறிவியல் குறித்த விரிவான அறிவை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆன்லைன் படிப்பு இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில்துறையில் உள்ளவர்கள் என பலதரப்பட்ட பங்கேற்பாளர்களுக்குத் திறக்கப்பட்டுள்ளது. நானோ அறிவியல் துறையில் வளர்ந்து வரும் முக்கியத்துவம் மற்றும் வேலைவாய்ப்புகளை கருத்தில் கொண்டு, இந்த பாடநெறி பங்கேற்பாளர்களுக்கு அவர்களின் திறன்களை மேம்படுத்தவும், இத்துறையில் உள்ள சமீபத்திய முன்னேற்றங்களைப் புரிந்துகொள்ளவும் உதவும்.
நவம்பர் 26 முதல் டிசம்பர் 9 வரை நடைபெறும் இந்தப் பாடத்திட்டத்தில், நானோ அறிவியலின் பல்வேறு தொகுதிகள், அடிப்படைக் கருத்துகள் மற்றும் நானோ தொழில்நுட்பத்தின் சமீபத்திய வளர்ச்சி மற்றும் பயன்பாடுகள் ஆகியவை இடம்பெறும். மருத்துவம், சுற்றுச்சூழல் அறிவியல், ஆற்றல் அறுவடை மற்றும் சேமிப்பு, நானோ நச்சுயியல், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் பொருள் அறிவியல் போன்ற துறைகளில் நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் எவ்வாறு உதவுகிறது என்பதை இந்த பயிற்சி விளக்கும்.
ஆர்வமுள்ளவர்கள் நவம்பர் 18-ஆம் தேதிக்குள் கூகுள் படிவம் (https://forms.gle/F37WYmS4ESqghZZb9) மூலம் பதிவு செய்ய வேண்டும். ஆசிரியர்களுக்கு ரூ.5,900, ஆய்வாளர்களுக்கு ரூ.4,130, மாணவர்களுக்கு ரூ.2,360 மற்றும் தொழிற்சாலை சார்ந்தவர்களுக்கு ரூ.9,440 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.